சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி; வங்கதேசம் எல்லையில் கைது
புதுச்சேரி : சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை மாகி போலீசார் வங்கதேசம் எல்லையில் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம், மாகியில் பல மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான பணி புரிகின்றனர்.
இங்கு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தங்கி, கட்டட பணி செய்தனர். இவர்களுடன் தங்கி இருந்த 17 வயது பெண், 3 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விசாரித்ததில், அப்பெண்ணை மேற்கு வங்க மாநிலம் சுதேசி பகுதியை சேர்ந்த தொழிலாளி சஞ்ய்த் ஷீல்,23, என்பவர் திருமணம் செய்துள்ளது தெரிய வந்தது.இது குறித்து, கடந்த ஜூலை 26ம் தேதி, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அளித்த புகாரின் பேரில், பள்ளூர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை தேடினர்.
இந்நிலையில், சஞ்ய்த் ஷீல் மேற்கு வங்கம் – வங்கதேசம் எல்லை, பெடாய் கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு வங்கம் சென்ற மாகி தனிப்படை போலீசார், அங்கு தங்கி, பெடாய் கிராமத்தில் பதுங்கியிருந்த சுதேசிசஞ்சய்த் ஷீலை கைது செய்தனர். அவரை மேற்கு வங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், மாகிக்கு அழைத்து வந்து, புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை 2 ஆயிரம் கி.மீ., துாரம் தேடிச்சென்று, 25 நாட்களில் கைது செய்த மாகி போலீசாரை, உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
கொலை குற்றவாளியை காதலியுடன்தங்க வைத்த 5 போலீசார் கைது
தார்வாட் ; கர்நாடகாவில், விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கொலை குற்றவாளியை, காதலியுடன் லாட்ஜ் அறையில் தங்க வைத்து, வெளியே காவலுக்கு நின்ற ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம், பல்லாரியில், 2009ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பச்சா கான், 55, என்பவர், பல்லாரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஹுப்பள்ளியில் இர்பான் கான் என்பவர் கொலை வழக்கில் இவரை ஆஜர்படுத்த, நேற்று முன்தினம், பல்லாரியிலிருந்து தார்வாட் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், சிறைக்கு செல்லாமல், உடன் வந்த ஐந்து போலீசார் உதவியுடன் பச்சா கான், தார்வாட் சத்துாரில் உள்ள, ‘பிரக்ருதி ரெசிடென்சி’ என்ற லாட்ஜில் தங்கினார்.
இது குறித்து, நகர போலீஸ் கமிஷனர் லாபுராமுக்கு தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்த அவர், ஹுப்பள்ளி வித்யாகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, லாட்ஜுக்கு சென்ற வித்யாகிரி போலீசார், ரெய்டு நடத்தினர். லாட்ஜ் அறை முன்பு காவலுக்கு நின்ற ஐந்து போலீசாரிடம் விசாரித்தனர்.அவர்கள், ‘பச்சா கான், தன் பெங்களூரு காதலியுடன் இருக்க, எங்களிடம் அனுமதி கேட்டார். நாங்களும் சரி என்றோம்’ என ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, ஐந்து போலீசாரும் கைது செய்யப்பட்டனர். பச்சா கான் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘குண்டாஸ்’ பாய்ந்தவர்கள், வழிப்பறியில் தொடர்பு
அவிநாசி : அவிநாசி, மங்கலம் ரோடு, கொடிகாத்த குமரன் நகரில் வசிப்பவர் சகுந்தலா, 67. கடந்த, 16ம் தேதி, பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்பவருடன், டீச்சர்ஸ் காலனி பிரிவு ரோட்டில் நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த இருவர், சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த, 7 சவரன் தங்க செயினை பறித்து தலைமறைவாகினர் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.
எஸ்.ஐ.,கள் அமல் ஆரோக்கியராஜ், கார்த்திக் தங்கம் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் வைத்து, கோவை, சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன், 31, அன்னுார், ஓதிமலை ரோடு, செல்லனுார் பகுதியை சேர்ந்த கண்ணன், 20 ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 7 சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
சிக்கியது எப்படி?
போலீசார், வழிப்பறி நடந்த இடத்தில் இருந்த, ‘சிசிடிவி’ கேமரா காட்சிகளின் பதிவு அடிப்படையில், விசாரணை மேற்கொண்டனர். இருவர் மீதும், கோவை சிங்காநல்லுார், காட்டூர் உள்ளிட்ட பல இடங்களில், 5க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளன; இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஏற்கனவே, சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
மதுராந்தகம் : மதுராந்தகம் அடுத்த மலைபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், 21, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், நேற்று முன்தினம் கயிற்றால் துாக்கிட்டார்.கடைக்கு சென்று வீடு திரும்பிய அவரது தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மதுராந்தகம் போலீசார், உடற்கூறு ஆய்வுக்கு பின், சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வாலிபர் துாக்கிட்டு இறந்தது குறித்து தீர விசாரித்து வருகின்றனர்.
ரூ. 4 லட்சம் மோசடி
கோவை, மத்வராயபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 26. தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்க்கிறார்.இவர், ஏ.எஸ்.ஆர்., டிரேடிங் சென்டர் என்ற நிதி முதலீட்டு நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து, அந்நிறுவன உரிமையாளர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டார். ‘2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வார நாட்களில் ஆயிரம் ரூபாய் முதல் 1,150 வரை தினமும் பெறலாம்’ என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.
அதை நம்பிய ஆனந்தகுமார், நான்கு லட்சம் ரூபாயை டிபாசிட் செய்தார்; ஒரு நாள் கூட அவருக்கு பணம் வரவில்லை. நிறுவனத்துக்கு போன் செய்தேபோது, யாரும் எடுக்கவில்லை. இதுதொடர்பான புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார், ரவிக்குமார், ராமு ஆகியோர் மீது வழக்கு பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.
வழிப்பறி; இருவர் கைது
கோவை புலியகுளம் பெரியார் நகர் ஆசிரியர் காலனியை சேர்ந்தர் ஜெயராஜ், 51. நகைப்பட்டறை தொழிலாளி. இவர், ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நடந்து சென்றபோது, அவருக்கு அறிமுகமான பைஜு, 28, மதன் குமார், 24, ஆகிய இருவரும் வழிமறித்து, மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் மறுத்ததும், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ஜெயராஜிடம் இருந்த 500 ரூபாயை பறித்துச் சென்றனர்.ராமநாதபுரம் போலீசாரின் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் மீதும், கஞ்சா வழக்கு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செயின் பறிப்பு: 2 பேர் கைது
மதுரை : மதுரையில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை தல்லாகுளம், திருப்பாலை, கூடல்புதுார், அண்ணாநகர், தெப்பக்குளம், எஸ்.எஸ்.காலனி பகுதிகளில் செயின் பறிப்பு, பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கிருஷ்ணாபுரம் காலனி வைரமணி, ஆத்திகுளம் வீரகார்த்திக்கை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் தங்க நகைகள், ரூ. 20,500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்