சென்னை கலைவாணர் அரங்கத்தில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழாவானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. அரசின் இந்த தேவையான முன்னெடுப்புக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அதே சமயம் எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் குறித்து அரசை விமர்சித்து வருகின்றன. ஒரு பக்கம் போதை பழக்கத்தை ஒழிக்க அரசு தீவிரம் காட்டு வருகிறது மறுபக்கம் டாஸ்மாக்கை நடத்தி வருமானம் ஈட்டி வருவதாக விமர்சனம் வைக்கின்றனர். மேலும், திமுக அரசின் இரட்டைவேடத்துக்கு இதுவே சாட்சி என்றும் அண்மையில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுக அரசு போதை பழக்கத்தை ஒழிக்க எடுத்துள்ள முடிவு அவர்களது வருமானத்தை பாதிப்பதால்தான் என சீமான் பேசியுள்ளார்.
சீமான் அந்த வீடியோவில், குட்கா, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துகிறவர்கள் டாஸ்மாக் பக்கம் செல்வதில்லை. இந்த போதையே போதுமானது என்று நினைத்து விடுகின்றனர். இதனால் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது. அந்த வேதனையில்தான் குட்கா, கஞ்சா போன்ற இதர போதை பொருட்களை தடுக்க திமுக அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார்.