தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் முதல் பெரியதாழை வரையிலும் 23 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்தக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து படகுகள் மூலம் கஞ்சா, தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள், கடல் அட்டை, விரலி மஞ்சள், ஏலக்காய், பீடி இலைகள் உள்ளிட்டவை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. க்யூ பிரிவு போலீஸார், மரைன் போலீஸார் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுவரும் போதிலும் சட்டவிரோதக் கடத்தல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4,430 வலி நிவாரண மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ஒரு குடோனில் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக மருந்து, மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான குழுவினர், அந்தப் பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் ஒரு குடோனில் 26 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மி.லி கொண்ட பாராசிட்டமல் சிரப் 2,500 பாட்டில்கள், 2 மி.லி கொண்ட லாசிக்ஸ் மருந்து ஒரு லட்சம் பாட்டில்கள், 100 மி.லி கொண்ட மெட்ரோஜின் மருந்து 1,000 பாட்டில்கள், பிரேப் மாத்திரைகள் 1,000 ஸ்ட்ரிப்கள், கான்ட்ரகிட் 1,000 எண்ணம் என மொத்தம் 1,05,500 மருந்து மற்றும் மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜெயபாரதி ராஜா, அவர் தம்பி ஜெயபார்த்தசாரதி, டிரைவர் சங்கரலிங்கம் ஆகியோரை கைதுசெய்ததுடன் அவர்களிடமிருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் மூவரும் சென்னையில் உள்ள மருந்து ஏஜென்சியிடமிருந்து மருந்து மாத்திரைகளை வாங்கி வந்திருக்கின்றனர். இவற்றை காயல்பட்டினம் கடற்கரை வழியாக படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. சென்னையிலிருந்து மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டியதே இவர்களது வேலை. இதனை இலங்கைக்கு படகு மூலம் கடத்திச் செல்வது மற்றொரு கும்பல் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இந்த மருந்து மாத்திரைகளை இலங்கையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்காக கடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இலங்கையில் இந்த மருந்து, மாத்திரைகளின் தற்போதைய மதிப்பு ரூ.32 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து க்யூ பிரிவு போலீஸாரிடம் பேசினோம். “இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினால் அங்கு மருந்து, மாத்திரைகள், உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி இலங்கையில் உள்ளவர்கள் இங்குள்ளவர்களை தொடர்புகொண்டு மாத்திரைகள், பிஸ்கட், சாக்லேட் உள்ளிட்டவற்றை அனுப்பிவைத்தால் 5 மடங்கு லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறிவருகிறார்கள்.
சமீபகாலமாகவே தூத்துக்குடி கடற்கரையோரப் பகுதிகளில் இதுபோன்ற அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல்கள் நடந்து வருகின்றன. அந்தப் பகுதிகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டன. இதனால் இந்தப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கடத்தலை தொடங்கியிருக்கின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் கண்காணிப்பினை தீவிரப்படுத்தியிருக்கிறோம்” என்றனர்.