ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அம்மாநிலத்தில் உள்ள பிவானி மாவட்டத்தில் ₹ 224 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நேற்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர்,
”ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன்’ என்று சுத்திர தின விழாவில் பிரதமர் ஒரு புதிய முழக்கத்தை முன் வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து 5 நாட்களுக்குள், இன்று மாநிலத்தில் 2 புதிய ‘ஆராய்ச்சி மையங்களுக்கு’ அடிக்கல் நாட்டியுள்ளோம். மேலும், 50,000 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க எனது அரசு திட்டம் தயாரித்துள்ளது.
விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் அப்பட்டமாகப் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது. ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால், வயல்களும் விஷமாக மாறிவிட்டது. இயற்கை விவசாயம்தான் இதற்கு ஒரே வழி, உணவுப் பழக்கத்தை மாற்றுவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
மாநில அளவில் 50,000 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு தொகுதியிலும் கண்காட்சி நடத்தப்படும்.
2.5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தாமாக முன்வந்து இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால் நாட்டு மாடுகளை வாங்க 50% மானியம் வழங்கப்படும். தொகுதி அளவில் 50-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் இயற்கை விவசாயிகள் என்று அழைக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய 700 வேளாண் மேம்பாட்டு அதிகாரிகள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள்.
இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் ஒரு விவசாயிக்கு நாட்டு மாடுகளை வாங்க ₹ 25,000 வரை மானியத்துடன், 4 டிரம்கள் வழங்கப்படும், இது பசுவின் சாணம் மற்றும் சிறுநீரைக் கலந்து இயற்கை உரம் தயாரிக்க பயன்படும்” என்றார்.