தமிழக நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம் செய்யப்பட்டபோதே, இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவர் பேசுபொருளானார். பொருளாதாரத்தில் அவர் கொண்டிருந்த அனுபவம் காரணமாக கட்சியில் சீனியர்கள் பலர் இருந்தபோதும், பிடிஆருக்கு நிதியமைச்சர் பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலினை பலரும் பலரும் பாராட்டினர். அதற்கு ஏற்றாற்போல், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஆனால், ஆரம்பம் முதலே பழனிவேல் தியாகராஜன் பாஜக மற்றும் ஒத்த சிந்தனையுடையவர்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். மத்திய அரசின் மீதான குறைகளை வெறும் வாயால் அவர் சொல்வதில்லை. புள்ளி விவரங்களோடு அடுக்குகிறார். தன்னை பற்றி வரும் எந்த ஒரு விமர்சனத்துக்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவதும், அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் தியாகராஜன் கொஞ்சம் ஓவராகவே பேசுகிறார் என்ற பிம்பத்தை உருவாக்குவதாக கூறுகிறார்கள்.
அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பிடிஅர், தனது முன் கோபத்தையும் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற குணத்தையும் விட்டு விட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவருக்கு விடுக்கப்படுகின்றன. ஆனால், எல்லா விதத்திலும் சரியாக இருக்கும் ஒருவரால், புகார்களுக்கு ஆளாகாத ஒருவரால் நிச்சயம் விமர்சனங்களையும், தவறான தகவல்களையும் எளிதில் கடந்து விட முடியாது என்று பிடிஆர் ஆதரவான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பிடிஆர் தொடர்ந்து விமர்சனங்களுக்கு மத்தியில் பயணித்து வந்தாலும், அவர் சார்ந்த நிதித்துறை ரீதியான செயல்பாட்டில் அவர் எந்தவித விமர்சனங்களும் இதுவரை எழவில்லை. எனவே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பணி ரீதியாகவோ வேறு எந்த வழிகளிலோ விமர்சிக்க முடியாமல் இருக்கும் பாஜக, வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என பேசும் அவரது பேச்சை கையில் எடுத்துள்ளாது. அவரது பேச்சுகள் அவருக்கு எதிராக திருப்பி விடப்படுகின்றன.
எனவே, இதுமாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. அதன் தொடர்ச்சியாக, சமீபகாலமாக பிடிஆர், எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தேசிய ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என பிடிஆர் பேசு பொருளாகியுள்ளார்.
இதுகுறித்த விவரம் அறிய மதுரை உடன்பிறப்புகளை தொடர்பு கொண்டபோது, எல்லாம் அந்த செருப்பில் இருந்து ஆரம்பித்தது என்கிறார்கள். ‘அவரு பாட்டுக்கு சும்மா இருந்தாரு, அவரு காரு மேல செருப்ப எறிஞ்சி, சிங்கத்த சீண்டி விட்டுட்டாய்ங்க; இப்போ நானும் மதுரைக்காரந்தேன்னு அவர் காட்டிடு வராரு’ என்று கெத்தாக பேசுகிறார்கள் பிடிஆருக்கு நெருக்கமானவர்கள்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது, அவர் காரின் மீது பாஜகவினரால் செருப்பு வீசப்பட்டது. ஊடகங்களில் அமைதியாக பேட்டி கொடுத்தாலும், பாஜகவுக்கு தக்க பாடம் கற்பிக்க எண்ணினார். அதன்படி, நடந்ததுதான் டாக்டர் சரவணன் தட்டித் தூக்கப்பட்டதும், அடுத்தடுத்து ஊடகங்களில் பாஜகவை பற்றி பேசி பிடிஆர் தெறிக்கவிட்டு வருவதும்.” என்கிறார்கள்.
அதேசமயம், மதுரையில் பாஜகவை வளர்த்ததில் டாக்டர் சரவணனுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. மருத்துவர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு தாவிய வரலாற்றை கொண்டிருந்தாலும், எந்த கட்சியில் இருக்கிறோமோ அந்த கட்சிக்கு கைக்காசை போட்டு செலவு செய்பவர். அத்துடன், மருத்துவ சேவைகளால் மதுரை மக்களின் மனங்களையும் கவர்ந்தவர். எனவே, வந்த வேகத்தில் கட்சியில் இருந்து அவர் வெளியேறியதை மாநிலத் தலைவர் அண்ணாமலையால் தாங்க முடியவில்லையாம். எனவேதான், செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை அவர் மீதே திருப்பி விட்டிருக்கிறார்கள் என்கின்றனர். இதனால், அவரை திமுகவிலும் இணைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவர்களது திட்டமாம். அதற்கு தகுந்தாற்போல், மதுரை திமுகவினரும் சரவணனை சேர்த்துக் கொள்ள கூடாது என்று அழுத்தம் கொடுக்கின்றனராம். ஆனால், நம்மை நம்பி வந்தவரை கைவிட்டு விடக்கூடாது என்பதில் பிடிஆர் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். எனவே, திமுகவில் மீண்டும் சரவணனின் ஐக்கியத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.