காந்திநகர்: தேர்தல் பிரசாரத்திற்கு இன்று குஜராத் சென்ற டெல்லி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அம்மாநில மக்களிடையே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர்.
“நான் இங்கு பிரதமராவதற்காக வரவில்லை. இந்தியாவை உலக நாடுகளில் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே மூன்றாவது ஆளாக ஆம் ஆத்மி களத்தில் இறங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இம்மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் இக்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூன்றாவது ஆளாக ஆம் ஆத்மி வந்து சேர்ந்துள்ளது. சமீபத்தில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் அதே உத்வேகத்தோடு தற்போது குஜராத்தில் பரப்புரையை அக்கட்சி மேற்கொண்டுள்ளது.
இரண்டு நாள் பரப்புரைக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் குஜராத்திற்கு வந்துள்ளனர். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், “நான் இங்கு பிரதமராவதற்காக வரவில்லை. இந்தியாவை உலக நாடுகளில் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன்” என கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுபான கொள்கை தொடர்பாக முறைகேடு செய்ததாக மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், தற்போது அவர் இந்த பரப்புரையில் பங்கேற்றுள்ளார்.
டெல்லியின் சுகாதாரம் மற்றும் கல்வி குறித்து பேசிய கெஜ்ரிவால், மதுபான கொள்கையில் முறைகேடு செய்ததாக மணீஷ் சிசோடியா மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை குறிப்பிட்டு மத்திய அரசை விமர்சித்து பரப்புரையை மேற்கொண்டார். அதேபோல “இன்னும் 2-3 நாட்களில் சிசோடியா கைது செய்யப்படலாம். யாருக்கு தெரியும் நான் கூட கைது செய்யப்படலாம். இவையெல்லாம் குஜராத் தேர்தலுக்காக நடக்கிறது” என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், 300 யூனிட் மின்சாரம் இலவசம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி தரப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஹிமத்நகரில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பங்கேற்ற அவர், “மணீஷ் சிசோடியா அரசு பள்ளிகளில் சீர்திருத்தங்களை செய்துள்ளார். 70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்ய முடியாதவற்றை அவர் செய்துள்ளார். இவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கல்வி திட்டமும் இவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் இவர் மீது சிபிஐ ரெய்டு நடத்துகிறது” என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.