கவுஹாத்தி: மருத்துவமனை ஒன்றில் மிசோரம் மாநில முதல்வர் மகளின் அத்துமீறல் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
அரசு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளின் பிள்ளைகள் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன.
இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் முதல்வர் மகளின் அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
மிசோரம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் இப்போது முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வரின் மகள் மிலாரி சாங்டே மருத்துவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது
முதல்வர் ஜோரம்தங்கா மகள் மிலாரி சாங்டே தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு தோல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இருப்பினும், முன் கூட்டியே அப்பாய்மெண்ட் வாங்காமல் வந்ததால், சிகிச்சை அளிக்க அந்த டாக்டர் மறுத்தாக கூறப்படுகிறது. அப்பாய்மெண்ட் வாங்கிக்கொண்டு வருமாறு டாக்டர் அவரிடம் கூறியதாகத் தெரிகிறது.
தாக்குதல்
அப்போது இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் டாக்டர் அருகே செல்லும் முதல்வரின் மகள், திடீரென முகத்திலேயே சரமாரியாக குத்து விடுகிறார். மற்றவர்களை அவரை தடுக்கும் போதிலும், அவர்களைத் தள்ளிவிட்டுத் தொடர்ந்து தாக்குகிறார். இந்த வீடியோ தொடர்பாக இணையத்தில் பலரும் மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவை சாடி வந்தனர்.
முதல்வர் மன்னிப்பு
மிசோரம் மருத்துவர்கள் சங்கமும் கருப்பு பட்டை அணிந்து பணிக்குச் சென்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு முதல்வர் ஜோரம்தங்கா வருத்தம் தெரிவித்து உள்ளார். மருத்துவரிடம் மகள் நடந்து கொண்டதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர், மகளின் நடத்தைக்காகத் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
மருத்துவர்கள் குற்றச்சாட்டு
இந்தியாவில் மருத்துவர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. மருத்துவமனைகளில் அத்துமீறி டாக்டர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், முதல்வரின் மகளே இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது சுகாதார பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பலரும் வலியுறுத்துகின்றனர்.