பழனி முருகன் கோயில் அபிஷேக கட்டண உரிமை விவகாரம்: குருக்கள் சங்க மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மதுரை: பழனி முருகன் கோயிலில் அபிஷேக கட்டணத்தில் திருமஞ்சனத்துக்காக ஒதுக்கப்படும் கட்டணத்திற்கு உரிமை கோரி குருக்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருமஞ்சனக் கட்டணத்தை பண்டாரங்களிடம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பழனி முருகன் கோயில் அர்ச்சகர்கள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு: பழனி முருகன் கோயிலில் 1970-ல் அபிஷேகத்துக்கு ரூ.9.40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணத்தில் ரூ.6.40 கோயிலுக்கும், ஸ்வர்ண புஷ்பத்துக்காக முறை குருக்களுக்கு ரூ.1, ஜெப தட்சிணைக்காக அத்யான பட்டருக்கு 25 பைசா, திருமஞ்சணத்துக்காக குருக்கள் அல்லது மிராஸ் பண்டாரத்துக்கு 75 பைசா, அபிஷேகம் மேற்கொள்பவருக்கு ரூ.1 என பிரிக்கப்பட்டது.

திருமஞ்சனத்தை குருக்கள் தான் மேற்கொள்கின்றனர். இதனால் திருமஞ்சன கட்டணத்தை குருக்களுக்கு தான் வழங்க வேண்டும். இது தொடர்பாக கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. எனவே கீழ் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து திருமஞ்சனக் கட்டணத்தை குருக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு: பழனி கோயிலில் குருக்களும், பண்டாரங்களும் பணிபுரிகின்றனர். அபிஷேகத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் திருமஞ்சன நீரை அர்த்த மண்டபம் வரை பண்டாரங்கள் கொண்டு வந்து குருக்களிடம் வழங்குகின்றனர். பின்னர் குருக்கள் அபிஷேகம் செய்கின்றனர். திருமஞ்சன நீரை காலம் காலமாக பண்டாரங்கள் தான் கோயில் அர்த்த மண்டபம் வரை எடுத்து வருகின்றனர். அதன் பிறகு அந்த நீரை குருக்கள் வாங்கி அபிஷேகம் செய்கின்றனர்.

கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த ஆவணங்களிலும் அவ்வாறு தான் உள்ளது. குருக்கள் திருமஞ்சன நீர் எடுத்து வருவதாக எந்த ஆவணத்திலும் கூறப்படவில்லை. இதனால் திருமஞ்சனத்துக்கான கட்டணம் பெற பண்டாரங்கள் தான் தகுதியானவர்கள். இது தொடர்பான அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.