பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று அணிவகுத்து சென்றபோது, திடீரென அவ்வாகனங்கள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
2020 ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. குறைந்த எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த போதிலும் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும் ஜேடியு – பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. இச்சூழலில், “பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. எனவே பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம்” என்று கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.
இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இடையே புதிய கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். இந்நிலையில், பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று அணிவகுத்து சென்றன.
திடீரென அவ்வாகனங்கள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். எனினும், சம்பவம் நடந்தபோது, எந்த வாகனத்திலும் நிதிஷ் குமார் பயணிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் யாரென அடையாளம் காண தீவிர விசாரணை நடத்திய நிலையில் தற்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திடீர் கல்வீச்சுக்கு என்ன காரணம்?
கடந்த இரண்டு மூன்று நாட்களாக காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து, ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் பாட்னா-கயா சாலையை மறித்து போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இளைஞன் கொலை செய்யப்பட்டதாகவும், அதனால் முதல்வர் வாகனம் செல்லும் போது, உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள், முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசியதில், பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக பாட்னா ஆட்சியர் சந்திரசேகர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM