மணிரத்னம் இயக்கத்தில் சோழர்களின் சிறப்பான வரலாற்றை கூறும் விதமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி கைவண்ணத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது, இந்த நாவலை படித்து கற்பனையில் காட்சிகளை வடிவமைத்து பார்த்தவர்கள் தற்போது அதை கண்களால் கண்டு ரசிக்கப்போகிறார்கள். இந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கக்கூடிய அளவில் இருக்கும். இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், அஷ்வின், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர்-30ம் தேதி உலகளவில் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிருக்கிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திலிருந்து வெளியான ‘பொன்னி நதி’ என தொடங்கும் முதல் சிங்கிள் பலரது மனங்களையும் கொள்ளையடித்த நிலையில், சமீபத்தில் ஆதித்த கரிகாலனின் வெற்றியை குறிக்கும் விதமாக வெளியான இரண்டாவது சிங்கிளான ‘சோழா சோழா’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சோழா சோழா பாடல் ஹைதராபாத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது, இந்த விழாவில் மணிரத்தினம், சுகாசினி மணிரத்தினம், சீயான் விக்ரம், கார்த்தி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போது இப்படம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளரான தில் ராஜு ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் தெலுங்கு பதிப்பின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களிடமிருந்து பெற்றிருக்கிறார். தற்போது தயாரிப்பாளர் தில் ராஜு அவரது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் ‘ஆர்சி15’ படத்தையும் தயாரித்து வருகிறார்.