மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஸோரம்தங்கா முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் மகள் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தலைநகர் ஐஸ்வாலில் உள்ள தோல் மருத்துவமனை ஒன்றிற்கு முதல்வர் ஸோரம்தங்காவின் மகள் மிலாரி சாங்டே சென்றுள்ளார். அவர் முன்கூட்டியே அப்பாயின்மெண்ட் வாங்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் சிகிச்சை அளிக்க டாக்டர் மறுத்துள்ளார். அப்பாயின்மெண்ட் வாங்கி வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மருத்துவரின் முகத்தில் ஓங்கி குத்து விட்டார். பின்னர் கைகலப்பாக மாறி மருத்துவமனையே பெரும் களேபரமானது. முதல்வரின் மகள் என்றால் இப்படி அத்துமீறி நடக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் முதல்வர் ஸோரம்தங்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் அவர்கள், மருத்துவரிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் எதையும் நியாயப்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
மருத்துவரும், அவரது குடும்பமும் மிகவும் அன்பானவர்கள். அவர்களுக்கு ஏற்பட்ட சங்கடத்தை உணர்கிறேன். அதேசமயம் மிகவும் பக்குவமாக நடந்து கொண்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காத இந்திய மருத்துவ சங்கத்திற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் மிசோரம் முதல்வர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பலரும் கொந்தளிக்க தொடங்கினர்.
எதிர்மறையான விமர்சனக் கருத்துகளை பதிவிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் மிசோரம் பிரிவினர் போராட்டத்தில் இறங்கினர். பணி செய்து வரும் மருத்துவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இத்தகைய பரபரப்பான சூழலில் முதல்வர் ஸோரம்தங்கா மகளுக்கு எதிராக டாக்டர்கள் பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார்களா? இல்லை விஷயம் சுமூகமாக முடித்து வைக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.