சென்னை: தமிழக மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளது. குறிப்பாக, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 முதல் 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, மின் கட்டண உயர்வு தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த 16-ம் தேதி கோவையிலும், 18-ம் தேதி மதுரையிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், காலை 9 முதல் 10.30 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.