மூன்று நூற்றாண்டு கால வரலாறு கொண்ட சென்னை மாநகர், போற்றத்தக்க பழமைகளையும், புத்துணர்ச்சி மிக்க புதுமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 383ஆவது சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் நகரின் முக்கிய அடையாளங்களை பார்க்கலாம்.
1856ஆம் ஆண்டு முதல் தொடர் வண்டி நிலையம் ராயபுரத்தில் அமைக்கப்பட்டாலும், சென்னையின் அடையாளமாக திகழும், சென்ட்ரல் ரயில் நிலையம் 1873ஆம் ஆண்டு ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைத்து கட்டப்பட்டது. `புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று தற்போது அழைக்கப்படும் இது, தென்னக ரயில்வேயின் தலைமை இடமாக திகழ்கிறது.
ரிப்பன் மாளிகை, விக்டோரியா அரங்கம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பாரம்பரிய கட்டடங்கள் அமைந்துள்ள பகுதி தற்போது மத்திய சதுக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு துவங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவான ரயில் போக்குவரத்தை சாத்தியமாக்கியுள்ளது. தற்போது, நகரில் 54 கிலோ மீட்டர் தூரம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்டத்தில் 118 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை நகரின் 128 பகுதிகளை இணைக்க உள்ளது.
சென்னையில் தரைவழி போக்குவரத்தின் மகுடமாக விளங்குகிறது கத்திபாரா மேம்பாலம். ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை (clover leaf) வடிவ மேம்பாலம் இது.
கத்திப்பாரா பாலத்தின் அடிப்பகுதியில் தமிழக அரசு நகர்ப்புற சதுக்கத்தை அமைத்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை நகரின் மிகப் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் 1869ஆம் ஆண்டு பிரான்சிஸ் நேப்பியர் என்ற சென்னை ஆளுநரால் கட்டப்பட்டது. கூவம் நதியை கடப்பதற்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாலம் தற்போது செஸ் போர்டாக மாறியுள்ளது.
அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா ஆசியாவின் முதல் பல்பொருள் அங்காடி. 1863ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு, 1985-ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
சென்னையில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட மால்கள் இருந்தாலும், இந்தியாவிற்கு ஒரு முன்னோடியான மால் என்றால் அது ஸ்பென்சர் பிளாசா தான்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM