மாண்டி: வட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் ஒடிசாவில் கடந்தமூன்று நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மண் வீடுகள், சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் மட்டும் கடந்த 3 நாட்களாக மழை தொடர்பான விபத்துகளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான 6 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாண்டி, கங்கரா, சம்பா மாவட்டங்களில் மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ரயில் பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தராகண்டில் நேற்று முன்தினம் தொடர்ந்து கனமழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளின் கரையோரம் இருந்த சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 13 பேரை காணவில்லை. அவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.தெஹ்ரி மாவட்டத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த மாவட்டத்தில் 40-க்கும்மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தெஹ்ரி, டேராடூன்,பாரி ஆகிய பகுதிகளிலும் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை ஏற்பாடு செய்துதர உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சம் பேர்,வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை ஒடிசா அரசு பத்திரமாக மீட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடர்மழை காரணமாக ராம்கர் மாவட்டத்தில் உள்ள நல்கரி ஆற்றில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.