ககாரியா: பிஹார் தினக் கூலி தொழிலாளி ஒருவருக்கு ரூ.37.5 லட்சம் வரிபாக்கியை செலுத்தக் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஹார் மாநிலம் ககாரியா மாவட்டம் மஹானா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் யாதவ். இவர் நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் பெறுகிறார். இந்நிலையில், இவரது பெயரில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ரூ.37.5 லட்சம் வரி பாக்கியை செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் கிரிஷ் யாதவ்.
போலீஸில் புகார்
இதுகுறித்து அலாலி காவல் நிலையத்தில் கிரிஷ் யாதவ் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில், கிரிஷ் யாதவ் பெயரில்பான் அட்டை பெற்று மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர். டெல்லியில் பணியாற்றும் கிரிஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு தரகர்ஒருவர் மூலம் பான் அட்டை பெற முயன்றுள்ளார். ஆனால், அதன்பின் அந்த தரகரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
கிரிஷ் யாதவ் ராஜஸ்தானில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதாக வருமான வரித்துறை நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராஜஸ்தானில் தான் ஒரு போதும் பணியாற்றியதில்லை என கிரிஷ் யாதவ் கூறியுள்ளார். கிரிஷ் யாதவ் பெயரில் பான் அட்டை பெற்று அதை யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளனர். மோசடி நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட் டுள்ளனர்.