மும்பை : பாலிவுட் திரையுலகில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கங்கனா ரணாவத். அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவது அல்லது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
ஹிருத்திக் ரோஷன் உடனான விவகாரத்திற்கு பிறகு பல சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து, தொடர்ந்து அனைவருடனும் விவாதம் செய்து வந்ததால் ட்விட்டர் இந்தியா நிர்வாகமே கங்கனாவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிற்கு வந்த கங்கனா, படுகவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து அலர விட்டார்.
கடைசியாக இவர் நடித்த தடக் படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக மீடியாக்களில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கும் மீடியாக்களிடம் கொந்தளித்த கங்கனா, என் படம் மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியும் என கோபப்பட்டார்.
கங்கனாவின் புதிய படம்
அதற்கு பிறகு கங்கனா பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், தனது புதிய படமான எமர்ஜென்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போலவே அச்சு அசலாக மாறிய கங்கனாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்த ஆரம்பிச்சுட்டாரே
கடந்த சில வாரங்களாக ஷுட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் என பார்த்தால், தற்போது மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். இது பாலிவுட்டில் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு கங்கனா செய்த காரியத்தால் சிறந்த நடிகைக்கான பரிந்துரை பட்டியலில் இருந்தே கங்கனாவின் பெயரை ஃபிலிம்ஃபேர் நிர்வாகம் நீக்கி உள்ளது.
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கங்கனா
டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கிய, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் ஜெயலலிதா ரோலில் நடித்திருந்தார் கங்கனா. இதில் கங்கனாவின் சிறப்பான நடிப்பை பாராட்டி, விரைவில் நடக்க இருக்கும் 67 வது ஃபிலிம்ஃபேர் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரை பட்டியலில் கங்கனாவின் பெயர் சேர்க்கப்பட்டது.
ஃபிலிம்ஃபேர் பற்றி கங்கனாவின் கருத்து
இந்நிலையில், “கடந்த 2014 முதல் நெறிமுறையற்ற, ஊழல் மற்றும் முற்றிலும் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வரும் பிலிம்பேர் போன்றவற்றை நான் தவிர்த்து வருகிறேன். இருந்தாலும் அவர்களது விருது விழாவில் பங்கேற்கும் படி எனக்கு தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. இந்த முறை தலைவி படத்திற்கு விருது என சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்னை அவர்கள் இன்னும் பரிந்துரைத்து வருவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதில் நான் பங்கேற்பது எனது தொழில் தர்மத்திற்கு எதிரானது. அதனால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளேன். நன்றி” என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
கங்கனா பெயர் நீக்கம்
அவர் இந்த விருது விழாவில் பர்ஃபாமென்ஸ் செய்ய வேண்டும் என தெரிவிக்கவில்லை. கங்கனா தெரிவித்துள்ளது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இந்திய சினிமா ஆளுமைகளை ஒன்றாக இந்த விழாவில் இணைக்கும் முயற்சியாக அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஐந்து முறை அவர் பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ளார். அதில் 2 முறை அவர் நேரில் வராத போதும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான பரிந்துரையில் அவரது பெயரை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். எங்களது நற்பெயரை கெடுக்கும் வகையிலான அவரது குற்றச்சாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க எங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது” என பிலிம்பேர் ஆசிரியக் குழு தெரிவித்துள்ளது.
கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன்
ஆஸ்கர், எம்மி போன்ற விருது விழாக்களையும் புறக்கணிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்துள்ள கங்கனா, விருதிற்கான பரிந்துரை பட்டியலில் இருந்து தனது பெயர் திரும்ப பெறப்பட்டுள்ளதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும், உங்களை கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டும் தெரிவித்துள்ளார்.