Doctor Vikatan: தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், எந்தெந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி…
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரும்பாலும் எல்லா உணவுகளையுமே சாப்பிடலாம். சில விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் அவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்வதைவிட, 500 கலோரிகள் அதிகமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
அப்படி அவர்கள் எடுக்கும் உணவானது சரிவிகிதத்தில், ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. கஃபைன் அளவு ஒருநாளைக்கு 300 மில்லிகிராமை தாண்டாமலிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
கஃபைன் என்பது ஒருவித ஊக்கமளிக்கும் பொருளாக இருப்பதால், அதன் விளைவாக குழந்தை ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கலாம். ஒரு கப் ஃபில்டர் காபியில் 140 மில்லிகிராம் அளவுக்கு கஃபைன் இருக்கும். இதுவே இன்ஸ்டன்ட் காபி என்றால் ஒரு கப்பில் 100 மில்லிகிராம் அளவுக்கு கஃபைன் இருக்கும். ஒரு கப் டீயில் 75 மில்லிகிராம் அளவு கஃபைன் இருக்கும். ஒரு சாக்லேட் பாரில்கூட 50 மில்லிகிராம் கஃபைன் இருக்கும்.
எனவே ஒருநாளைக்கு 2 முதல் 3 கப்புக்கு மேல் காபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தது ஆல்கஹால் எடுப்பதையும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர்க்க வேண்டும். வாரத்துக்கொரு முறையோ, இருமுறையோ ஒன்றிரண்டு யூனிட் ஆல்கஹால் எடுப்பதால் பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஒரு யூனிட் என்பது எவ்வளவு என்ற தெளிவு வேண்டும்.
ஒரு சிறிய கப், அதாவது 125 மில்லி அளவு என்பது ஒரு யூனிட். ஆல்கஹால் பழக்கம், குழந்தையை பாதிக்கும் என்பதால் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்களுக்கு மட்டும், அதிலும் ஒன்றிரண்டு யூனிட்டுகளுக்கு மிகாமல் எடுப்பது ஓகே. தாய் ஆல்கஹால் குடிப்பதால், அது தாய்ப்பால் வழியே குழந்தைக்குப் போகும் என்பதால், ஆல்கஹால் குடித்த அடுத்த சில மணி நேரத்துக்கு தாய்ப்பால் ஊட்டுவதை சம்பந்தப்பட்ட பெண்கள் தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால் மற்றும் சிகரெட் பழக்கமுள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் திடீரென உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இதை `சடன் இன்ஃபேன்ட் டெத் சிண்ட்ரோம்’ ( Sudden infant death syndrome (SIDS) ) என்று சொல்கிறோம்.
மீன் சாப்பிடுவது நல்லது என்றாலும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு 170 கிராம் அளவு என இரண்டு நாள்களுக்கு மட்டும் எடுக்கலாம். அதிலும் மெர்க்குரி அளவு அதிகமுள்ள மீன்களைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
அதாவது மெர்க்குரி அளவு அதிகமுள்ள சுறா மீன், வாள் மீன் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதே போல கிழங்கான் மீன், கானங்கெழுத்தி மீன் போன்ற எண்ணெய் அதிகமுள்ள மீன்களையும் அளவோடு எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது.
ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட எந்த உணவும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு ஏற்றதல்ல. அது குழந்தைக்கு வயிற்று வலியை ஏற்படுத்தலாம். அதே போல மூலிகை சப்ளிமென்ட் என்ற பெயரில் வரும் உணவுகளையும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும்.
வாயுத் தொந்தரவைக் கொடுக்கும் உணவுகளையும் தவிர்த்துவிடலாம். சட்டத்துக்குப் புறம்பான கொகைன், ஹெராயின் போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். இவை தவிர ஆரோக்கியமான, சரிவிகித உணவுகள் எல்லாவற்றையும் சாப்பிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.