தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையாக ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை.
நடப்பு 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் பள்ளிகளுக்கு வருகைத் தந்து பாடங்களை படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில், 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் 23 முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு, அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.