“அந்த மாணவிகள் என்மகளின் ஃப்ரெண்ட்தானா? ஆதாரத்த காட்டுங்க’-கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

45 நாட்களாகியும் மர்மம் ஏன் இன்னும் மர்மமாகவே இருக்கிறது என்று விழுப்புரத்தில் பேட்டியளித்த கள்ளக்குறிச்சி மாணவி  தாயார் செல்வி வருத்தம் தெரிவித்துள்ளார். 
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேற்றைய தினம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையில் முதல் மற்றும் இரண்டாம் பிரேத பரிசோதனை விவரங்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பரிசோதனை அறிக்கை விவர நகல்களை வழங்கும்படி மாணவியின் தாயார் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாயார் செல்வி, ’’மாணவியின் தோழிகள் 2 பேர்  2 மணிநேரம் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாங்களே அதை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டோம். உண்மையில் அந்த மாணவிகள் என் மகளின் ஃப்ரெண்ட் தானா என்பதை நான் அறிந்துகொள்ளும் வகையில் தக்க ஆதாரத்துடன் என்னிடம் காட்டவேண்டும். ஏனென்றால் அவர்களும் என்னுடைய மகள்கள் மாதிரிதான். அவர்கள்தான் சொன்னார்களா என்று எங்களுக்கு தெரிந்தால்போதும். எனக்கு மகளின் ஃப்ரெண்ட்ஸ் யாரெல்லாம் என்று தெரியும்.இதை ஏன் கேட்கிறேன் என்றால் உண்மையிலேயே அது என் மகளின் ஃப்ரெண்ட்தானா அல்லது நிர்வாகத்தால் அனுப்பப்பட்டவர்களா என்று தெரிந்துகொள்ளவேண்டும். நாங்களும் வெளியே யாருக்கும், எந்த செய்திக்கும் சொல்லமாட்டோம். ரகசியமாக பாதுகாப்போம்.
மாணவி எழுதியதாக வெளியான கடிதம் என் மகளின் கையெழுத்தே இல்லை என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறோம். ஆனால் இவ்வளவு நாளாகியும் அது யாருடைய கையெழுத்து என்று இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. 45 நாட்களாகியும் மர்மம் ஏன் இன்னும் மர்மமாகவே இருக்கிறது என்று தெரியவில்லை. தயவுசெய்து எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்து மக்களுக்கும் எங்களுக்கும் உண்மையை சொல்லுங்கள்’’ என்று கூறினார்.
மேலும் வரும் 26ஆம் தேதி கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இருந்து நடைப்பயணமாக சென்னை சென்று முதலமைச்சரை நேரில் சந்தித்து மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு மனு அளிக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.