குஜராத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் 14 பேர் கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்குற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை கடுமையாக சாடியுள்ளார்.
குஜராத்தில் சபர்மதி ரயில் எரிப்பை தொடர்ந்து கோத்ராவில் நடந்த வன்முறையின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. இதில் பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கும்பல், அவரது 3 வயதுப் பெண் குழந்தை உட்பட குடும்பத்தினர் 14 பேரை கொலை செய்தது.
இந்தக் கொடூர குற்றத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேர், அண்மையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். குஜராத் அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மெளவா மொய்த்ரா, சிபிஎம் கட்சியின் சுபாஷினி அலி உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அவற்றை விரைந்து விசாரிக்குமாறு மூத்த வழக்கறிஞர்கள் அபர்ணா பட், கபில்சிபல் ஆகியோர் தலைமை நீதிபதி ரமணாவிடம் முறையிட்டபோது, விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். உரிய ஆவணங்களைப் பார்த்த பிறகு வழக்கு பட்டியலிடப்படும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி யுடி சால்வி விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை கடுமையாக சாடியுள்ளார்.
“இந்த வழக்கின் ஒவ்வொரு செயல்முறையிலும் அனைத்து ஆதாரங்களையும் கடந்து 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்றனர் என்பதை அனைவரும் அறிவோம். அரசாங்கத்திற்கு நிவாரணம் வழங்க அதிகாரம் உள்ளது, ஆனால் எந்தவொரு முடிவையும் வழங்குவதற்கு முன்பு அது ஒவ்வொரு காரணிகளையும் பற்றி சிந்திக்க வேண்டும், இல்லையெனில் அது சரியல்ல. அவர்கள் முறையான நடைமுறையை மேற்கொண்டார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது
இது தவிர, இந்த 11 குற்றவாளிகளை வரவேற்பது சரியல்ல. சிலர் இதை இந்துத்துவத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள் அல்லது அவர்கள் ஒரு இந்துவாக இதைச் செய்தார்கள். அது தவறு. சிலர் தங்களை பிராமணர்கள் என்று சொல்கிறார்கள். அது சரியல்ல. எந்தவொரு நிவாரணத்தையும் வழங்கும்போது, பாதிக்கப்பட்டவர் மற்றும் செய்த குற்றத்தைப் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்களா அல்லது மன்னிப்புக் கேட்டிருக்கிறார்களா? இந்த மக்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மாலைகளையும் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அதைப் பற்றி குற்ற உணர்ச்சியுடன் இருப்பதாகத் தெரியவில்லை,” என்று ஓய்வுபெற்ற நீதிபதி யுடி சால்வி கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM