அமராவதி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார்.
அப்போது பிரதமரிடம், போலவரம் அணைக்கட்டு பணிகளை முடிக்க நிதி உதவி செய்ய வேண்டுமென ஜெகன் மோகன் வேண்டுகோள் விடுத்தார். இதற்காக மாநில அரசு ரூ.2,900 கோடி செலவு செய்ததாக தெரிவித்த ஜெகன், அதனை உடனடியாக திரும்ப வழங்கும் படி கேட்டுக்கொண்டார்.
மேலும், ரூ. 32,625.25 கோடி நிதி, மாநில அரசுக்கு மத்திய அரசுவழங்க வேண்டியுள்ளது. இதனையும் உடனடியாக வழங்க கேட்டுக்கொண்டார். ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் முழுவதுமாக வழங்கப்படவில்லை. இதனால், ஆந்திராவிற்கு வழங்கும் அரிசி கொள்ளளவை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
தெலங்கானா ‘டிஸ்காம்’ (மின்சார உற்பத்தி நிறுவனம்) நிறுவனத்தில் இருந்து வர வேண்டிய ரூ.6,756 கோடி கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனை தெலங்கானாமாநில அரசிடமிருந்து பெற்றுதர வேண்டும். மாநில பிரிவினையின் போது வழங்கிய வாக்குறுதிகளையும், மசோதாவில் தெரிவித்தபடி அமல்படுத்த வேண்டும்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களுக்கு வெறும் 11 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே உள்ளன. புதிதாக 3 கல்லூரிகளுக்கு அனுமதிவழங்கப்பட்டது. மேலும், 12 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
கடப்பாவில் இரும்பு தொழிற் சாலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமரிடம் ஜெகன் வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து, மத்திய மின்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங்கை ஜெகன்மோகன் சந்தித்து பேசினார். இவரை தொடர்ந்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஜெகன்.