ஆம்பூர்: தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை, இன்று காலை இந்தியாவின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான பரிதா குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், முறைகேடான வருமானம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அடுத்தடுத்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள், அரசு காண்டிராக்டர் செய்யாதுரைக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை, புதுச்சேரி, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் ஃபரிதா குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. பல்லாயிரம் கோடி மதிப்பில் உலக நாடுகளுக்கு காலணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது ஃபரிதா குழுமம்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளார்கள்.