பீஜிங்: சீனாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைந்து வரும் பட்சத்தில், கொரோனாவின் காரணமாகவும் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்றால் அது சீனா தான். உலக மக்கள் தொகை பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அந்த நாட்டில் மக்கள் தொகை சுமார் 140 கோடியை தாண்டியுள்ளது.
இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தது.
3 குழந்தைகளுக்கு அனுமதி
குறிப்பாக மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கும் நோக்கில் சீனாவில் கடந்த 1980 -ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை ஒரு குழந்தை கொள்கையே அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சீனாவில் ஓரளவு மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 70 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தற்போது இந்த விதிமுறையை தளர்த்தியது சீனா. அதன்படி இப்போது சீனா நாட்டில் தம்பதியினர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு சம்மதித்துள்ளது.
கொரோனா ஏற்படுத்திய தாக்கம்
இதனை ஊக்குவிக்கும் சீனா அரசு மக்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வரிச்சலுகைகள், பேறுகால விடுப்பு என பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஒருகாலத்தில் அதிக குழந்தைகள் பெற்றெடுக்க தடை விதித்த சீனா தற்போது 3 குழந்தைகள் பெற்றெடுக்க அனுமதித்துள்ளது. இதே சூழ்நிலையில், கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எண்ணற்ற பலிகள், உளவியல் பாதிப்புகள் என மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.
பிறப்பு விகிதம் குறைந்தது
இப்படி எத்தனையோ சோதனைகளை கொடுத்த கொரோனா, சீனாவின் பிறப்பு விகிதத்திலும் ஆப்பு வைத்திருக்கிறது. சீன தேசிய சுகாதார கமிஷன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு; திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு விகிதத்தில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் தங்கள் திருமணத்தை தள்ளிப்போடுகின்றனர். மணமான பெண்கள் தங்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதையும் தாமதித்து வருகின்றனர்.
ஜீரோ கோவிட் கொள்கையால்
கொரோனா காரணமாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட அபரிமிதமான மாற்றங்களே இத்தகைய போக்குக்கு காரணம். இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வது, கல்விக்காக அதிக நேரம் செலவிடுவது மற்றும் அழுத்தமான பணிச்சூழல் ஆகியவையும் இதற்கு ஒரு காரணமாக உள்ளன. சீனா பின்பற்றி வரும் ஜீரோ கோவிட் கொள்கையால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான ஆர்வம் தம்பதிகள் மத்தியில் குறைய ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
10 மில்லியன்களுக்கும் கீழ் சரியும்
கொரோனா வைரசும் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு விவகாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெளிவாக தெரிவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சீனாவில் புதிய பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சீனாவில் 10.6 மில்லியன்களாக குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு 11.5 மில்லியன்களாக இருந்தது. ஆனால், இந்த அணிக்கை நடப்பு ஆண்டு 10 மில்லியன்களுக்கும் கீழ் சரியக்கூடும் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு (2021) மட்டும் சீனாவில் கருவுறுதல் விகிதமானது 1.16 ஆக இருக்கிறது. இது உலக நாடுகளின் கருவுறுதல் விகிதத்தோடு (2.1) ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.