இனி தமிழில் கையெழுத்து போட வேண்டும் – ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சிறுவயதில் புத்தகத்தின் கடைசி பக்கங்களில் வெறும் கையெழுத்திட்டே பழகும் மாணவர்கள் இப்போதுவரை அந்தப் பழகத்தைத் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றனர். கையெழுத்தின் மீதான மோகம் ஒவ்வொருவருக்கும் அங்கிருந்தே தொடங்குகின்றன. அதன்பிறகு பருவத்துக்கு ஏற்றார் போல கையெழுத்து வடிவங்களோ, ஸ்டைலோ மாறிவிடுகின்றன. என்னதான் நம் இஷ்டத்துக்கு கையெழுத்துக்களை உபயோகித்து வந்தாலும், அரசின் அனைத்து பதிவேடுகளிலும் ஒரே கையெழுத்து அவசியமாகிறது. 

பொதுவாக கையெழுத்து நாம் எப்படி போடுவோம். ஒன்று ஆங்கிலத்தில், இல்லையெனில் அவரவர் தாய்மொழியில். இது அவரவர் ரசனை சார்ந்தது. சிலர், கையெழுத்து அழகாக இருக்கிறது என்று பிறர் சொல்வதற்காகவே  அடிக்கடி கையெழுத்தை மாற்றுவது உண்டு. வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், ஒருவரின் குணாதியசங்களை எடைபோடுவது வரை கையெழுத்து முக்கிய பங்கு வகிக்கிறது. கையெழுத்து சரியாயிருந்தா தலையெழுத்து சரியா இருக்கும் என்று ஓர் பழமொழி கூட உண்டு.

இது ஏன் ? கையெழுத்தை வைத்து ஜோசியம் எல்லாம் பார்க்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, கையெழுத்து என்பது அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு, ஆவணப் பாதுகாப்பு, காப்புரிமை உள்ளிட்ட விவகாரங்களுக்குத்தான் என்றாலும், அதைத்தாண்டியும் கையெழுத்தில் ஒன்றுண்டு. அந்தப் புள்ளி என்ன ?

அரசியல் மற்றும் பண்பாட்டில் கையெழுத்தின் பங்கு என்ன ? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழில் கையெழுத்துப் போடும் வழக்கம் குறைந்து வருவதாக நெடுநாட்களாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுகொண்டு தமிழ்நாட்டில்தான் வளரும் தலைமுறை ஒரு வாழ்த்துக் கடிதத்தில்கூட தங்களது உணர்வுகளை பிழையின்றி சொல்லத்தெரியாத நிலை இருந்துவருகிறது. 

எதிலும் பிழை, எங்கும் பிழை. தமிழ், தமிழ் என்று பேசிக்கொண்டு இருக்கக் கூடாது செயலில் இறங்க வேண்டும் என்று மொழியியல் ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

அதாவது, ‘ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை இனி தமிழில்  இட வேண்டும். பள்ளி மாணவர்கள் இனிஷியல் முதற்கொண்டு தமிழில் தான் எழுத வேண்டும். அதேபோல், வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும். இந்த உத்தரவுகளை ஆசிரியர்களும் பின்னப்பற்ற வேண்டும். 

அனைத்து பதிவுகளிலும் பெயர்களை தமிழில் எழுதப்படுகிறது என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கண்காணிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அறிக்கை, தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் இந்த முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்து வரும் பலர், யதார்த்தத்தில் எந்தளவுக்கு இது சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளனர். அனைத்து ஆவணங்களிலும் இனி குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கையெழுத்துக்களை மாற்ற வேண்டும் என்ற யதார்த்த சிக்கலை முன்வைக்கின்றனர். மேலும், சிலர் கையெழுத்து எப்படி வேண்டுமானாலும் போடுவோம், தமிழில்தான் போட வேண்டும் என்பது ஒருவகையில் திணிப்பு இல்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ, தமிழ் வெல்லும் என்பது மட்டும் உறுதி.! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.