இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து விசாரித்தோம்.
இயக்குநர் பாரதிராஜா, இப்போது நடிகராக பிஸியாக இருக்கிறார். விஷாலின் ‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்திய ‘ஈஸ்வரன்’, ‘ராக்கி’, ‘குற்றமே தண்டனை’, ‘திருச்சிற்றம்பலம்’ எனப் பல படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டு வருகிறது. அதிலும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் தூண்களில் ஒருவராகவே அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. அந்தப் படத்தின் ரிலீஸ் சமயத்தில் தேனிக்குச் சென்று ஓய்வு எடுத்து வந்த பாரதிராஜா, சில நாள்களுக்கு முன்னர்தான் சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதி என்றதும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவிடம் பேசினேன்.
“அப்பா நல்லா இருக்காங்க. வழக்கமா சர்க்கரை நோய் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குப் போய் செக்கப் பண்ணிக்குவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் போனாங்க. உப்பு அளவு குறைவா இருக்கறதால, உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு இருக்குதுன்னு தெரிய வந்தது. அவர் உடல்நிலையும் சோர்வா இருந்துச்சு. டிஹைட்ரேட் ஆனதால, இப்போ அவருக்கு ஓய்வு தேவை. அதனால அப்பா மருத்துவமனையில்தான் அட்மிட்டாகி இருக்கார். ரெண்டு, மூணு நாள்கள் மருத்துவமனையில் அப்சர்வேசன்ல இருக்கச் சொல்லியிருக்காங்க. தேவையான சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகிடுவாங்க” என்கிறார் மனோஜ்.