இரண்டாண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்… பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி!

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தலைத்தூக்கிய கொரோனா வைரஸ், 2020 இல் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் பரவியது. உலக மக்களை உண்டு, இல்லை என்று செய்து வந்த கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பொது மக்களை காப்பாற்ற, ஆரம்பத்தில் பொதுமுடக்கத்தை கைகொள்வதை தவிர உலக நாடுகளுக்கு வேறு வழி தெரியவில்லை. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முன் எப்போதும் இல்லாத அனுபவமாக அவர்கள் வீட்டில் இருந்தபடியே வகுப்பு பாடங்களை படிக்கும் ஆன்லைன் கற்பித்தல் முறையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமல்படுத்தப்பட்டது.

சரி… இப்படியே லாக்டவுன்… ஆன்லைன் வகுப்புகள் என்று போயிட்டே இருந்தா நாளடைவில் பிள்ளைகளின் கற்றலில் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாணவர்களின் பெற்றோர் அச்சம் தெரிவிக்க தொடங்கினர். பெற்றோரின் இந்த நியாயமான பயத்தை கருத்தி்ல் கொண்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 2021 இறுதியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஃபிலிப்பைன்சில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்து வந்தன. பல மாதங்களாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்ட வருவதால் மாணவர்களின் கற்றல் திறன், கல்வி சூழல் மோசமாகி வருவதாக பெற்றோரும், கல்வியாளர்களும் அச்சம் தெரிவித்து வந்தனர்.

குறைந்துவரும் கொரோனா பரவல்… ஆனால்… WHO அதிர்ச்சி தகவல்!

இதனையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஃபிலிபைன்சில் நேற்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகவும் ஆர்வமும், உற்சாகத்துடனும் பள்ளிகளுக்கு வருவதாகவும், அவர்கள் தங்களது நண்பர்களை ஆரத்தழுவி நலம் விசாரித்து மகிழ்வதாகவும் பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

முக கவசம், சமூக இடைவெளி என கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுப்பறையில் கடைபிடிக்க மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன பள்ளி நிர்வாகங்கள். நாடு முழுவதும் முதல்கட்டமாக 50% பள்ளிகளே திறக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று ஃபிலிபைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.