கோலாலம்பூர்: பல கோடி ஊழல் முறைகேட்டில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
மலேசிய பிரதமராக கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை பதவி வகித்தவர் நஜீப் ரஸாக் (69). தனது ஆட்சிக்காலத்தின் போது நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் ‘1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ (1எம்டிபி) என்ற அமைப்பை நஜீப் ரஸாக் தொடங்கினார். அரசுக்கு சொந்தமான அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தையும் அவரே கவனித்து வந்தார். இந்நிலையில், 1எம்டிபி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பல கோடி மலேசிய ரிங்கிட், பிரதமர் நஜீபின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் மலேசியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என நஜீப் மறுத்து வந்தார். எனினும், அவரை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த சூழலில் 2018 மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மகாதிர் முகமது புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, 1எம்டிபி முறைகேடு தொடர்பான விசாரணை சூடுபிடித்தது. இதில் முறைகேட்டில் நஜீப் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருந்ததாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன. மேலும், 10 மில்லியன் டாலரை எஸ்ஆர்சி நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக நஜீப் பெற்றதற்குமான ஆதாரங்களை புலனாய்வு அமைப்புகள் கைப்பற்றின. இதனால் அதே ஆண்டு ஜூலை மாதம் நஜீப் ரஸாக் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், நஜீப் ரஸாக்குக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் (சுமார் ரூ.370 கோடி) அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நஜீப் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், நஜீபுக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் உறுதி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.