பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து கருணையின் அடிப்படையில் விடுதலையானவர்கள் பிராமணர்கள் என்றும் அவர்களிடம் சில நற்பண்புகள் இருக்கும் என்றும் குஜராத் பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் இந்த விவகார்ம் பேசுபொருளான நிலையில், எந்த கடவுளும் பிராமணர் கிடையாது என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் தெரிவித்துள்ளார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில், “Dr B.R. Ambedkar’s Thought on Gender Justice: Decoding the Uniform Civil Code” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட், “மானுடவியல் ரீதியாக, அறிவியல் ரீதியாக… தயவு செய்து நமது கடவுள்களின் தோற்றத்தைப் பாருங்கள். எந்த கடவுளும் பிராமணர்கள் இல்லை. அவர்களில் உயர்ந்தவர் ஒரு சத்திரியர். பாம்புடன் கல்லறையில் அமர்ந்திருப்பதால் சிவபெருமான் கண்டிப்பாக பட்டியல் சாதி அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும். அவருக்கு உடுத்துவதற்கு கொடுக்கப்பட்ட ஆடையும் கூட குறைவு. பிராமணர்கள் கல்லறையில் உட்கார மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் தெளிவாகப் பார்த்தால், லட்சுமி, சக்தி உட்பட அனைத்து தெய்வங்களை எடுத்துக் கொண்டாலும், மானுடவியல் ரீதியாக கடவுள்கள் ஆதிக்க சாதியிலிருந்து வரவில்லை. ஜெகநாதரை எடுத்துக் கொண்டால் அவர் மிகவும் பழங்குடியினர். எனவே, மனிதாபிமானமற்ற இந்த பாகுபாட்டை நாம் ஏன் இன்னும் தொடர்கிறோம்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“மனுஸ்மிருதி” அனைத்து பெண்களையும் ‘சூத்திரர்கள்’ என்று வகைப்படுத்தியுள்ளது, இது பிற்போக்குத்தனமானது என்றும் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் சாடியுள்ளார். “மனுஸ்மிருதியின் படி அனைத்து பெண்களும் சூத்திரர்கள். எனவே, எந்தப் பெண்ணும் தன்னை ஒரு பிராமணன் என்றோ அல்லது வேறு எதையும் கூற முடியாது. திருமணத்தின் மூலம் மட்டுமே நீங்கள் கணவரின் அல்லது தந்தையின் சாதியைப் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இது அசாதாரணமான பின்னடைவு என்று நான் நினைக்கிறேன்.” என்று சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த ஆசிரியரால் தாக்கப்பட்டு இறந்ததாக கூறாப்படும் ஒன்பது வயது தலித் சிறுவன் பற்றி பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக, பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் இன்று அது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. ஒரு பிராமணரோ அல்லது வேறு எந்த சாதியினரோ செருப்புத் தொழிலாளியாக இருந்தால், அவர் உடனடியாக தலித் ஆகிவிடுவாரா? இல்லை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், சமீபத்தில் ராஜஸ்தானில் ஒரு தலித் சிறுவன் தண்ணீரைத் தொட்டான்; குடிக்கக்கூட இல்லை. ஆதிக்க சாதியினரின் தண்ணீரைத் தொட்டான் என்பதற்காக அடித்துக் கொல்லப்பட்டான். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இது மனித உரிமைகள் பற்றிய கேள்வி. சக மனிதனை நாம் எப்படி இப்படி நடத்த முடியும்.”என்று கேள்வி எழுப்பினார்.
அம்பேத்கரின் அடையாளமான “சாதி ஒழிப்பு – Annihilation of Caste” நூல் பற்றி சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் குறிப்பிடுகையில், “இந்தியச் சமூகம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், சாதியை அழிப்பது மிகவும் முக்கியமானது. பாரபட்சமான இந்த அடையாளத்தால் நாம் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. செயற்கையாக கட்டமைக்கப்பட்ட அடையாளத்தை பாதுகாக்க யாராவது முயன்றால் அவர்களை கொல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றும் ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் ஒரு பெண்ணாகவும், இடஒதுக்கீடு பிரிவுகளில் இருந்து வந்தவராகவும் இருந்தால், நீங்கள் இருமடங்காக ஓரங்கட்டப்படுகிறீர்கள். முதலில், நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதால் ஓரங்கட்டப்படுகிறீர்கள். அடுத்தது குறிப்பிட்ட சாதியின் அடிப்படையில் நீங்கள் ஓரங்கட்டப்படுகிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
“பௌத்தம் மிகப் பெரிய மதங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இந்திய நாகரிகம் கருத்து வேறுபாடு, பன்முகத்தன்மை மற்றும் வேறுபாட்டை அது ஏற்றுக்கொள்கிறது என்பதை நிரூபிக்கிறது. பிராமண இந்து மதம் என்பதன் முதல் எதிர்ப்பாளர் கௌதம புத்தர். வரலாற்றில் முதல் பகுத்தறிவாளர் அவர் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரால் புத்துயிர் பெற்ற பாரம்பரியம் நமக்கு உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.