மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். இதைத் தொடர்ந்து 33 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வரலாறு படைத்தது. அதன்பிறகு மம்தா பானர்ஜி புதிய அரசியல் அத்தியாயம் எழுதி இடதுசாரிகளை ஓரங்கட்டினார். தொடர்ந்து 3 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது அரசியல் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் வகையில் மாநில கட்சிகளை குறிவைத்து ஆபரேஷன்களை நடத்தி வருகிறது.
அந்த லிஸ்டில் மேற்குவங்க மாநிலமும் ஒன்று. இதற்கான அச்சாரம் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போடப்பட்டது. 3 சீட்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களை தன்வசப்படுத்தி 77 சீட்களாக தன்னை உயர்த்திக் கொண்டது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தியது. 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 63 இடங்களில் வெற்றி பெற்று 13 சதவீத வாக்குகளை தன்வசப்படுத்தியது. இதற்கிடையில் பாஜகவில் இருந்து பலரும் தங்களது தாய்க் கட்சிகளுக்கு திரும்பும் சம்பவங்கள் அரங்கேற பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் தனது இலக்கில் உறுதியாக நின்று, அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தல் வெற்றிக்காக தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. இந்நிலையில் பாஜகவிற்கு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது, நந்திகிராமில் கூட்டுறவு சங்கத்திற்கு நடந்த தேர்தலில் 99 சதவீதம் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சதவீதம் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் தோல்வியை தழுவியிருக்கிறது. மொத்தமுள்ள 52 சீட்களில் திரிணாமூல் காங்கிரஸ் 51, இடதுசாரிகள் 1 இடங்களில் வென்றனர்.
இதன்மூலம் பாஜக தக்க பாடம் கற்றுக் கொண்டது என்றும், மேற்குவங்கத்தில் உங்கள் ஆட்டம் இனி செல்லாது என்றும் இணையத்தில் கருத்துகள் பதிவிடத் தொடங்கிவிட்டனர். இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் சரியான முறையில் எடுத்துரைத்து எங்களின் செல்வாக்கை நிரூபிக்க தவறிவிட்டோம் என்றனர். முன்னதாக கூட்டுறவு சங்க தேர்தலை ஒட்டி பல்வேறு கூட்டங்களை நடத்தினார் சுவேந்து அதிகாரி. திரிணாமூல் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர் என்றும், வளர்ச்சியை நோக்கி நம்மை அழைத்து செல்வதில் பாஜகவே முன்னிலை வகிக்கிறது என்றும் பேசினார்.
ஆனால் எதுவும் எடுபடாமல் போய்விட்டது. நந்திகிராம் என்றதும் அனைவருக்கும் நினைவில் தோன்றுவது 2021 சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி வாகை சூடியது தான். நந்திகிராம் போராட்டம் தான் மம்தா பானர்ஜி அரசியல் விஸ்வரூபம் எடுக்கவும், முதல்வராக முடி சூடவும் அடித்தளமாக இருந்தது. இந்த தொகுதியில் 2009ஆம் ஆண்டில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கொடி தான் பறக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பாஜக வென்றது முக்கியத்துவம் பெற்றது. அங்கேயே பாஜக தற்போது வீழ்த்தப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.