சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக இருந்த ஜெயா டிவி 24-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அந்த டிவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்திருப்பதும், அந்த வாழ்த்து செய்தி அதே டிவியில் ஒளிபரப்பாகி இருப்பதும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைவதற்கான அச்சாரமாக கட்சியினர், அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா இருக்கும் வரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாகவும், ‘நமது எம்ஜிஆர்’ அதிகாரப்பூர்வ நாளிதழாகவும் இருந்து வந்தது. அவர் முதல்வராக இருக்கும்போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், வேட்பாளர் தொடர்பான அறிவிப்புகள், அரசாணைகள், உத்தரவுகள், அறிக்கைகள் உள்ளிட்டவை முதலில் ஜெயா தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பாகும். அதன் பிறகே மற்றவர்களுக்கு விவரங்கள் தெரியவரும். இதனால் அதிமுகவினர் மட்டுமல்லாது பிற கட்சியினர்கூட பார்க்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றதாக இருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். இதனால் சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. அப்போது ஜெயா டிவி, ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழ் நிர்வாகமும் சசிகலா வசம் சென்றது. அதன் பிறகு ஓபிஎஸ்ஸின் முகத்தை ஜெயா டிவியில் காட்டுவதில்லை.
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு, ஆட்சிப் பொறுப்பை பழனிசாமியிடம் ஒப்படைத்தார். அடுத்த சில மாதங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இணைந்தனர். சசிகலா தனித்து விடப்பட்டார்.
தற்போது ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே விரிசல் ஏற்பட்டு, அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயா டிவி நேற்று 24-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. அதற்காக பல்வேறு அரசியல் பிரபலங்களின் வாழ்த்துகள் நேற்று சிறப்பு பேட்டியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் ஓபிஎஸ்ஸின் சிறப்பு பேட்டியும் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து பணியாற்ற வருமாறு இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஓபிஎஸ் பேட்டி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி இருப்பது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் ஓபிஎஸ் கூறியிருப்பதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெயா தொலைக்காட்சி, 23 ஆண்டுகள் தனது வெற்றி பயணத்தை நிறைவு செய்து, 24-வது ஆண்டாக தனது வெற்றி பயணத்தை தொடர்கிறது. இந்த தருணத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து நிலைகளிலும் ஜெயா தொலைக்காட்சி உடனுக்குடன் செய்திகளை முந்தித் தருவதில் முன்னணி தொலைக்காட்சியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதன் வெற்றி பயணத்தில் 23 ஆண்டுகள் உழைத்திருக்கும் தொலைக்காட்சியின் அனைத்து நிலையிலும் பணியாற்றிக்கொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
6 ஆண்டுக்கு பிறகு ஓபிஎஸ் பேட்டி ஜெயா டிவியில் ஒளிபரப்பான நிலையில், அதிமுகவினர், அரசியல் நோக்கர்கள் மத்தியில் சசிகலா – ஓபிஎஸ் இணைவதற்கான அச்சாரமாகவே இது பார்க்கப்படுகிறது.