மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகில் மடவாமேடு மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேலான மீனவக் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 40 நாட்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 60 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்ளே நுழைந்துள்ளது.
இதையடுத்து, கடல் அரிப்பு ஏற்பட்டு வருகின்ற காரணத்தால் மீனவ மக்கள் படகுகளை கடலுக்குள் செலுத்துவது மற்றும் பின் கரைக்கு மேலே கொண்டு வருவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வந்தால் அந்த கிராமமே மொத்தமாக கடலுக்குள் மூழ்குகின்ற நிலை ஏற்படும் அபாயம் இருப்பதால் மீனவ கிராம மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். எனவே, இதை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, சீர்காழி எம்.எல். ஏ. எம்.பன்னீர்செல்வம் மற்றும் கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு, மக்களிடம், ‘விரைவில் உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்துள்ளனர்.