இயக்குநர் பா.இரஞ்சித் கடைசியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இரஞ்சித் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படமானது பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாக இருக்கிறது. இதன் பூஜை சமீபத்தில் நடந்தது. இதற்கிடையே இரஞ்சித் காதல் களத்தை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்று முழுக்க முழுக்க காதல் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.
இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்த துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். வழக்கமாக பணியாற்றும் குழுவோடு இல்லாமல் புதிய தொழில்நுட்ப குழுவோடு களமிறங்கியிருக்கிறார் பா.இரஞ்சித். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ரங்கராட்டினம் என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. அதேபோல் ட்ரெய்லரும் வெளியாகி பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது. படமானது ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் வெங்கட் பிரபு, சசி, கலைப்புலி தாணு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். விழாவில் இரஞ்சித் தனது தாயாரை மேட்டைக்கு அழைத்து கௌரவப்படுத்தினார். அதன் பிறகு பேசிய இரஞ்சித், “ஜெய்பீம் என்ற ஒரு வார்த்தைதான் என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் தொடங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறதுவரை வந்துள்ளது. நான் யாரையும் வளர்த்து விடவில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான்.
அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. வெங்கட் பிரபுவிடம்தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம்தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. இயக்குநர் சசி, நான் உதவி இயக்குநராக இருந்தபோது என்னை கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என் உதவி இயக்குநர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அதுதான் காரணம். வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர்.
Thank you for the hearty wishes @vp_offl Sir #NatchathiramNagargiradhu #NN #Mankatha @beemji @vigsun @Manojjahson @YaazhiFilms_ @tenmamakesmusic @thinkmusicindia pic.twitter.com/CHdEp5GIsd
— Neelam Productions (@officialneelam) August 23, 2022
இந்த மூன்று பேரும் இங்கிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒருவர் கலைப்புலி தாணு மற்றொருவர் ஞானவேல். கலைப்புலி தாணுவுக்கு கபாலி செய்தபோது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இன்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை என்ற மன உளைச்சலில் இருந்தேன். ஆனால் தாணு கூப்பிட்டு படத்தின் வசூலை காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கி இருந்திருக்க மாட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்” என்றார்.