கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில்,உயிரிழந்த மாணவியின் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர. மேலும் ஸ்ரீமதியின் நெருங்கிய தோழிகள் இரண்டு பேரிடம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெற்றார்.
இந்நிலையில் இன்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோரான தந்தை ராமலிங்கம் தாயார் செல்வி ஆகியோர் ஜிப்மர் மருத்துவ பரிசோதனை அறிக்கையினை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், தங்கள் மனு மீது விசாரணை நடத்தி மாணவியின் உடற் கூறாய்வு அறிக்கையை தங்களுக்கு தருமாறு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், வாக்குமூலம் பெறப்பட்ட இரண்டு பேரும் உண்மையில் மாணவியின் தோழிகள்தானா என்பது குறித்து தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.
மாணவியின் தாய் செல்வி பேசுகையில், “எனது மகளின் இறப்பிற்கு நீதி வேண்டி எங்கள் சொந்த ஊரிலிருந்து வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபயணமாக சென்று தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என மனு கொடுக்கவிருக்கிறோம். சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை தமிழக அரசே எடுத்து நடத்தவேண்டும். கடந்த காலங்களில் இந்தப் பள்ளியில் ஏழு கொலைகள் நடந்திருக்கின்றன.
எனது மகள் இறந்து 43 நாட்கள் ஆகியும் இதுவரை உண்மை தன்மை தெரியவில்லை. பள்ளி நிர்வாகத்திற்கு 90 சதவீதம் அரசு அதிகாரிகள் விலை போய் இருக்கின்றனர்” என்றார்.