உயிரை பணயம் வைத்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்; நடவடிக்கை பாயுமா?
குன்னூர் : நீலகிரியில் இரவு நேரங்களில் கேரட் அறுவடை செய்ய கலெக்டர் தடை விதித்துள்ள நிலையில் இதை மீறி சில தோட்ட ஏஜென்டுகள் தொழிலாளர்களை நிர்பந்தம் செய்து இரவில் பணிக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், மனித, விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இதில், கேரட் பயிரிட அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. சிலர், கடன் பெற்று பயிரிட்டும் வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, கேரட் கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் விவசாயிகள் கேரட் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரட் அறுவடை செய்ய கூலி ஆட்கள் மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் உறங்கும் நேரத்தில் நெத்தியில் டார்ச் லைட், முழங்கால் வரை பூட்ஸ், சால்வை, மூட்டையை தூக்க உதவும் பெரிய கொக்கிகளுடன் நள்ளிரவில் பணிக்கு செல்கின்றனர்.
நள்ளிரவில் அறுவடை செய்து இயந்திரங்கள் உதவியுடன் அதனை சுத்தம் செய்து லாரிகளில் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கேரட் அறுவடைக்காக தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை முறையே மாற்றியுள்ளனர். பகலில் உறக்கம் இரவில் வேலை செய்து வருகின்றனர். பிக்கப் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களில் பின்புறம் அமர்ந்து அபாயகரமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கேரட் மூட்டையை சுமந்து செல்வோருக்கு தனிக்கூலி என்பதால் பெரும்பாலான ஆண்கள் மற்றும் இளைஞர்கள் கேரட் மூட்டையை சுமந்து செல்கின்றனர்.
தோட்டத்தில் சுமார் 100 கிலோ முதல் 110 கிலோ வரை எடையுள்ள கேரட் மூட்டையை தொழிலாளர்கள் சுமந்து வருகின்றனர். மழையால் பாதை முழுவதும் சேறும் சகதியாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் மூட்டையை சுமந்து செல்கின்றனர். உடலை வருத்திக் கொண்டு கடினமாக உழைக்கும் இவர்களின் வாழ்வாதாரம் இன்றும் பின்தங்கியே உள்ளது. சுமை தூக்கி தூக்கி இவர்களின் முதுகில் சிவந்த நிறத்தில் கொப்பளங்கள் நிறைந்து காணப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் படிப்பினை பாதியில் விட்டு கேரட் அறுவடை செய்யும் கூலி வேலைக்கு அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதால் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இதனால், இரவு நேரங்களில் மனித விலங்கு மோதலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இரவு நேரத்தில் கேரட் அறுவடை செய்ய தடை விதித்துள்ள நிலையில் அதனையும் மீறி இடைத்தரகர்கள் இரவு நேரத்தில் தொழிலாளர்களை கேரட் அறுவடை செய்ய வற்புறுத்தி வருகின்றனர். வேறு வழியில்லாமலும், குடும்ப சிரமத்திற்காகவும் தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிலர் வனவிலங்கு தாக்கியும் இறந்துள்ளனர்.
ஆகையால், இரவு நேரங்களில் கேரட் அறுவடை செய்ய கலெக்டர் தடை விதித்துள்ளார். இதையும் மீறி சில தோட்ட ஏஜென்டுகள், இரவில் வந்து கேரட் அறுவடை செய்து கொடுக்குமாறு தொழிலாளர்களை நிர்பந்தித்து வருகின்றனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கேத்தி பாலாடா பகுதியை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கேரட் கழுவும் இயந்திரங்கள் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ளன.
தொழிலாளர்கள் இரவில் அதிகமாக பணியில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு கேத்தி பாலாடா அருகே பகுதியில் கேரட் மூட்டை சுமக்க நள்ளிரவில் சென்ற கக்காச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் லாரி மோதியதில் உயிரிழந்தார். அதேபோல், கடந்த ஆண்டு இரவில் பணிக்கு சென்ற நந்தினி என்ற இளம்பெண், கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கி அவரது தாய் கண் முன் பலியானார். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தினமும் இரவு நேரங்களில் காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக கேரட் கழுவும் இயந்திரங்கள் உள்ள இடத்தில் வீசப்பட்ட அழுகிய கேரட்டை சாப்பிட வருகின்றன. அந்த சமயங்களில் காட்டு மாடுகள் தொழிலாளர்களை தாக்கும் அபாயமும் உள்ளது. இதைத்தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.