குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை! வீடியோ வைரல்!

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவராயபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும். இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் சுமார்‌ 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை டஸ்கர் இன யானை குப்போபாளையம், அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விளை நிலங்களில் புகுந்து சோளம், கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.   

குப்பேபாளையம் பகுதியில் வெங்காய பட்டறை ஒன்றை இடித்து தள்ளி சூறையாடியது. ஜெயப்பரகாஷ் என்பவரது தோட்டத்தில் புகுந்து மோட்டார் பம்புகளை இடித்து தள்ளியது. யானையை பார்த்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகள் மிரண்டு ஓடியது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அட்டுக்கல் வழியாக கெம்பனூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை வடக்கு வீதியில் ரங்கராஜ் என்பவர் வீட்டின் முன்பு நீண்ட நேரம் நின்றது. நாய்கள் சத்தம் கண்டதை கண்டு வெளியில் வந்த சிலர் யானை நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தினர். 

யானை ஊருக்குள் பல இடங்களில் சுற்றி இன்று அதிகாலை 5 மணியளவில் வனப்பகுதியை நோக்கி சென்றது. யானை ஊருக்குள் வீதியில் வந்ததை மாடியில் நின்றவாறு சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் அருகே விளைநிலம் மற்றும் குடியிருப்பையொட்டி பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு‌மாதத்தில் மட்டும் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் இரண்டு நபர்கள் யானை தாக்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.