நீலகிரி: கூடலூர்- மலப்புரம் செல்லும் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள், வாகன டிரைவர்கள் கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மலைப்பாதையில் காட்டு யானைகள் கேரள மாநிலம் தொடங்கி நீலகிரி மலைப்பிரதேசம், கர்நாடகாவின் பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் ஆகிய இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் குன்னூர், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் சாலைகளை காட்டு யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது. இதேபோல் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் செல்லும் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஏராளமான சரக்கு லாரிகளும் இயக்கப்படுகிறது. தொடர்ந்து மாநில எல்லையில் வாகன டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று பகல் 11 மணிக்கு வழிக்கடவில் இருந்து கூடலூர் வரும் மலைப்பாதையில் 2 காட்டு யானைகள் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தது. வனத்துறை எச்சரிக்கை தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டிருந்ததால் காட்டு யானைகளால் கடந்து செல்ல முடியவில்லை.
தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். பின்னர் வெகு நேரம் நின்றிருந்த காட்டு யானைகள் திடீரென சாலையை கடந்து சென்றது தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி சாலையை கடந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனிடையே மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி வைக்க கூடாது என்று எச்சரித்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். உத்தரவை மீறி மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் போலீசார் எச்சரித்துள்ளனர்.