சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் எம்3 திட்ட மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி இடையே, 270 கோடி ரூபாய் மதிப்பில், கோவளம் பேசின் திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கு, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கிறது.
பேசின் திட்டம், எம்1, எம்2, எம்3 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இதில் பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோழிங்கநல்லுார், நீலங்கரை, ஈஞ்சம்பாக்கம், கானத்துார், உத்தண்டி ஆகிய 52 கி.மீ., துாரம் எம்3 திட்ட பகுதிக்குள் வருகிறது.
இதில் எம்3 திட்ட பகுதி மணல் பரப்பு என்பதால், இயற்கையாகவே நீர் உறிஞ்சும் தன்மை இருப்பதால், கான்கிரீட் வடிகால் தேவையில்லை என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், எம்1, எம்2 திட்ட பகுதிகள் 150.47 கோடி ரூபாய் மதிப்பில், 39 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, எம்3 திட்ட பணிகளையும் மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, எம்3 திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், ஆக.25-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை, நீலங்கரை, சந்தீப் அவென்யூ, 2வது தெருவில் உள்ள, சுகன்யா திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், காலை 10:00 மணிக்கு மாநகராட்சி நடத்துகிறது.
இதில், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலங்களை சார்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பங்கேற்று தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.