பெரியகுளம்/கோவை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைவுபடுத்தும்படி திமுக அரசை வலியுறுத்திப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பெரியகுளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புகழேந்தி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஜெயலலிதா காலத்தில், அவருக்கு அருகில் இருந்து செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதிகார வெறியால் என்னை மட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவையும் கட்சியில் இருந்து பழனிசாமி நீக்கினார். அவர்கள் கூறிய அத்தனை விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு, அமைதியாகத்தான் நடந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,500 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளார் பழனிசாமி. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த வழக்கில் அவர் விரைவில் சிறைக்குச் செல்வார்.
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தும்படி திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக பெரிய போராட்டத்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு புகழேந்தி கூறினார்.
தொண்டர்களிடையே ஒற்றுமை
ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “பன்னீர்செல்வத்தை தவறாகப் பேசியகே.பி.முனுசாமியை கண்டிக்கிறோம். அதிமுகவில் தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்.
பாஜக தலையிடுவதில்லை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்சப் பட்டியலை விரைவில் வெளியிடுவோம். நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு பிறகுதான் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் செல்வார். அதிமுக அழிந்துவிடக் கூடாது எனக் கருதுபவர் பிரதமர். ஆனால், பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் பழனிசாமி. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. யாரும் சமரசம் செய்யும் அளவுக்கு அதிமுக இல்லை” என்றார்.