தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். முதல்வரை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வெள்ளகோவில் சாமிநாதன்,கயல்விழி செல்வராஜ், முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் வரவேற்றனர்..
முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக விமான நிலையத்திலிருந்து பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை வரை திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து முதல்வர் இன்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
இதையடுத்து தமிழக முதல்வர் நாளை காலை 10 மணிக்கு ஈச்சனாரி பகுதியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து அவர் அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பின்னர் இரவே திருப்பூர் சென்று அடுத்த நாள் 25ம் தேதி மற்றும் 26 ஆம் தேதியில் திருப்பூர் ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் கோவை வந்து பி எஸ் ஜி கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு சென்னை கிளம்புகிறார்.
கோவை மாவட்டம் முழுவதும் முதல்வர் வருகையையொட்டி இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது சுமார் ஒரு மணி நேரத்தை தாண்டி தமிழக முதல்வர் வழி நெடுகிலும் தொண்டர்களை சந்தித்தபடி சென்று கொண்டிருக்கிறார்..
தற்போது பீளமேடு பகுதியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது..
இதில் கோவை வடக்கு மாவட்ட கூடலூர் நகர திமுக தொண்டர்கள் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என்ற முதல்வரின் கோரிக்கையை ஏற்று கைகளால் எழுதப்பட்ட துணி பதாகைகளை ஏந்தி முதல்வரை வரவேற்றனர்…
அந்த துணி பதாகையில் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முதல்வரின் வாரிசே, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை என ஆணையிட்ட திராவிட மாடல் அரசே வருக, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி எங்கள் உயர் கல்விக்கு உதவிய தந்தையே என முதல்வரை வாழ்த்தி வரவேற்று வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளது…