மாணவர்களை சாதி ரீதியாக தாழ்த்தி பேசிய, சென்னையில் உள்ள அரசுக் கல்லூரித் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திங்கள்கிழமை சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.
விசிகே-வைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.செல்வம் செஞ்சுடர் அளித்த புகாரின்படி, சென்னையில் உள்ள பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றின், தமிழ்த் துறைத் தலைவர் மாணவர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசும் போது சாதிரீதியாக இழிவாக பேசினார். .
மாணவர்களின் சமூகப் பின்னணி குறித்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்னைகளை உருவாக்குவதாகக் கூறும் இணைப் பேராசிரியரின் ஆடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
ஆதாரத்தின்படி, பேராசிரியர் ஒரு மாதத்திற்கு முன்பு மாணவனிடம் பேசியதாக தெரிகிறது. இந்த ஆடியோ கிளிப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக மூத்த ஆசிரியர் மீது சில மாணவர்கள் அளித்த புகார்களை விசாரிக்க, ஒரு குழுவை அமைக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் துறைத்தலைவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தனது புகாரில் வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்.காமிடம் பேசிய வழக்கறிஞர் செல்வம், இந்த ஆடியோ கிளிப் சனிக்கிழமை தெரிய வந்ததாகவும், திங்கள்கிழமை புகார் அளித்ததாகவும் கூறினார். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“