சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர் குருசாமி. இவரின் மகளுக்கு இந்து சமய அறநிலையதுறையில் வேலை வாங்கிதருவதாக கூறி இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராமர் பூசாரி என்பவர் ரூ.3 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், தான் சொன்னதுபோல் குருசாமியின் மகளுக்கு இதுவரையில் ராமர் பூசாரி வேலை வாங்கித்தரவில்லை என கூறப்படுகிறது
இதனால் சந்தேகமடைந்த குருசாமி, வேலைக்காக கொடுத்த 3 லட்ச ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித்தராமல் ராமர் பூசாரி ஏமாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி தான் ஏமாற்றப்பட்டது குறித்து குருசாமி, சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குருசாமியின் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி இருக்கன்குடி காவல்நிலைய போலீஸார், குருசாமியின் புகாரின்படி ராமர் பூசாரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இருக்கன்குடி கோவிலுக்கு சொந்தமான நகைகளை கையாடல் செய்த வழக்கில் ராமர் பூசாரி அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும், கோயில் பூஜை முறை பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கட்டங்களை கட்டாமலேயே, கட்டியதாக கணக்குக்காண்பித்து பல லட்சத்தை மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.யில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.