புதுடில்லி : சிவசேனா கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சின்னம் தொடர்பாக நாளை வரை எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என, தேர்தல் கமிஷனுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில், கடந்த ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் தனியாக பிரிந்தனர். பெரும்பான்மையை இழந்ததால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை இழந்தார்.ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வரானார்.இந்நிலையில், கட்சிக்கு உரிமை கோரியும், கட்சி சின்னத்துக்கு உரிமை கோரியும் இரு தரப்பும் வழக்குகள் தொடர்ந்தன.
மேலும், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹீமா கோஹ்லி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமர்வு உத்தரவிட்டதாவது:எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நாளை விசாரிக்கும்.
முதலில் சின்னம் தொடர்பாக விசாரிக்கப்படும். அதுவரை, கட்சி சின்னத்துக்கு உரிமை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக தேர்தல் கமிஷன் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement