சேலம் ஆத்தூர், துலுக்கனூர் கிராமம் அருகே நேற்று நள்ளிரவு 1.00 மணி அளவில் முல்லைவாடி பகுதியிலிருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த ஆத்தூர் நகர காவல் நிலைய போலீஸார், `விபத்தில் உயிரிழந்தவர்கள், ஆத்தூர் லீ பஜார் பகுதிக்கு துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் என்றும், இடையில் டீ சாப்பிடுவதற்காக வாகனத்தை ஓரம் கட்டியபோது வாகனம் விபத்துக்குள்ளானது தெரிய வந்திருக்கிறது. மேலும் விபத்தில் முல்லை வாடி பகுதியை சேர்ந்த சரண்யா, சுகன்யா, சந்தியா, ரம்யா, ராஜேஷ் ஆகிய 30 வயதிற்கு உட்பட்ட நபர்களும், தனிஷ்கா எனும் 11 வயது சிறுமியும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
மேலும் வாகனத்தில் பயணித்து வந்த பெரியண்ணன், புவனேஸ்வரி, கிருஷ்ணவேணி, உதயகுமார், சுதா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அறிந்து நேற்று இரவே ஆர்.டி.ஓ சரண்யா, டி.எஸ்.பி., ராமச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களையும் நேரில் சென்று விசாரித்துள்ளனர்.
மேலும் இன்று காலை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.
சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.