வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ‛ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் ரம்மியமான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் தங்கத்துடன் பெர்லியம் பூசப்பட்ட குவி ஆடி கண்ணாடிகள் உள்ளன. இதனால் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்கள், சிறுகோள்களை படம் எடுக்க முடியும். இந்த தொலைநோக்கி தற்போது வியாழன் கோளை துல்லியமாக படம் பிடித்துள்ளது. நாசா வெளியிட்ட வியாழன் கோளின் படங்கள் பலரையும் ஆச்சரியமூட்டியுள்ளது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வியாழன் கோளின் புதிய புகைப்படங்கள் ஜூலை 27ல் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்து நிற்கும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி நாசா வெளியிட்டுள்ளது. இந்த புதிய புகைப்படங்களில் புவியின் வட, தென் துருவங்களில் ஏற்படும் ஒரு அரிய நிகழ்வான “அரோரா” வியாழனிலும் நிகழ்வது படம்பிடிக்கப்பட்டுள்ளது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இம்கே டி பேட்டர் கூறுகையில் ‛வியாழன் பற்றிய விவரங்களை அதன் வளையங்கள், சிறிய செயற்கைக்கோள்கள், அரோராக்கள் மற்றும் விண்மீன் திரள்களை இப்படத்தில் காணலாம். இது இவ்வளவு சிறப்பாக வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement