விஜய் தேவரகொண்டா நடிப்பில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் ‘லைகர்’. பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படத்தை கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இதில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இப்படம் பேன் இந்தியா படமாக வெளியாவதைத் தொடர்ந்து, படக்குழு புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டுவருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாகவே ‘பாய்காட் லைகர்’ என்று இந்தப் படம் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
சமீபகாலமாகவே சில திரைப் பிரலங்களும் அவர்கள் நடித்த படங்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஆமிர் கானின் ’லால் சிங் சத்தா’ மற்றும் அக்ஷய் குமாரின் ’ரக்ஷா பந்தன்’ உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்த நிலையில், இதற்குக் காரணம் ‘பாய்காட் லால் சிங் சத்தா’, ‘பாய்காட் ரக்ஷா பந்தன்’ என்ற சமூக வலைதள பிரசாரம் எனக் கூறப்பட்டது. இந்த பாய்காட் பிரசாரத்துக்கு எதிராக பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் கூட கோபமாகத் தன் கருத்துகளை முன்வைத்திருந்தார்.
இதனிடையே புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வரும் விஜய் தேவரகொண்டா பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, எதிரில் இருப்பவர்களை மதிக்காமல், முன்னால் இருந்த டேபிளில் காலைத் தூக்கி வைத்து திமிராகப் பதில் அளித்ததால்தான் நெட்டிசன்கள் தற்போது ‘லைகர்’ படத்தையும் விஜய் தேவரகொண்டாவையும் பாய்காட் செய்யச் சொல்கின்றனர் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘லைகர்’ படம் பாய்காட் செய்யப்படுவது குறித்து விஜய் தேவரகொண்டா பேசியபோது, “நாம் சரியாக நமது வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, யாருடைய பேச்சையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நேர்மையாகவும் மற்றவர்களுக்கு நல்லதையும் செய்ய விரும்பினால், மக்களின் அன்பும் கடவுளின் அன்பும் உங்களை எப்பொழுதும் பாதுகாக்கும்” என ட்வீட் செய்துள்ளார்.
மேலும், “‘லைகர்’ படத்திற்காக உளப்பூர்வமாக எங்களின் அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளோம். நான் சரியானதைச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். இப்போது பயப்படுவதற்கான அவசியமில்லை. என்னிடம் எதுவுமே இல்லாதபோதும்கூட நான் பயந்தது இல்லை. அன்னையின் ஆசி இருக்கிறது. மக்களின் அன்பு இருக்கிறது. உதவிக்குக் கடவுள் இருக்கிறார். என்னுள்ளே நெருப்பு இருக்கிறது. யார் எங்களைத் தடுக்கிறார்கள் என்று பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.