தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.