தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என்பது ஒரு மாயை என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக, ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. செப்.7-ம் தேதி தொடங்கும் இந்த நடைபயணத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். ஆளுநர் மாளிகையில் அரசியல் ரீதியான சந்திப்புகள், கருத்தரங்கங்கள் நடத்தப்படுவது முறையல்ல.
பாஜக தமிழகத்தில் காலூன்றுவது என்பது அரசியல் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் நடக்காது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக பாஜகவுக்கு கூட்டம் கூட்டப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வருகிற கூட்டம், தானாக சேருகிற கூட்டம். பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது என்று கூறப்படுவது ஒரு மாயை.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் முறைப்படி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி விதிப்படி பொதுக்குழுவை கூட்டி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல்வேறு அதிகார கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு ஆட்சி நடத்தப்பட்டு வரும்போது, அதில் பங்கேற்பாளர்களாக இருக்கும் அதிகாரிகள் ஒரு சிலர், இந்துத்துவா கொள்கை உடையவர்களாக இருக்கலாம். அவர்களின் செயல்பாட்டை ஆட்சியின் செயலாக, கொள்கையாக கருதக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், நகரத் தலைவர் கனகவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.