சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (46). தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மகன்கள் பாரதிராஜா, பாரதி செல்வா (14). இளைய மகன் பாரதி செல்வா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல கடந்த 22-8.2022-ம் தேதி சேகரும் அவரின் மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டனர். மூத்த மகன், பாரதி ராஜா கல்லூரிக்கு சென்றுவிட்டார். பாரதி செல்வாவும் பள்ளிக்குச் சென்றுள்ளான்.
மாலையில் கல்லூரி முடிந்து மூத்த மகன் பாரதி ராஜா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது பாரதி செல்வா, வீட்டுக்குள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாரதிராஜா கதறி அழுதார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பின்னர் கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பாரதி செல்வாவின் சடலத்தை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக பாரதி செல்வா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் மாணவன் பாரதி செல்வா பயன்படுத்திய செல்போனை அவனின் குடும்பத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சில வீடியோக்கள் இருந்தன. அந்த வீடியோவில், `என்னைப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தினமும் அடித்து கொடுமைபடுத்தி வருகின்றனர். அதனால் நான் மனஉளைச்சலில் இருந்தேன். கையை அறுத்துக் கொண்டு சாகப் போகிறேன்.
இந்த உலகத்தை எனக்குப் பிடிக்கவில்லை. என் சாவுக்கு என்னுடைய குடும்பத்தினர் காரணம் இல்லை. முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம்” என்று பேசியுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாரதி செல்வாவின் குடும்பத்தினர், வீடியோக்களை கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தும்படி தெரிவித்தனர். இதையடுத்து மாணவன் படித்த பள்ளியில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையடுத்து மாணவன் பேசிய இன்னொரு வீடியோவில், “என்னை சென்னையில் புதைக்கவும் எரிக்கவும் வேண்டாம். நகரிக்கு கொண்டு சென்று அங்குதான் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்” என கண்ணீர்மல்க பேசியுள்ளார். அடுத்த வீடியோவில் மாணவன் தூக்கு மாட்டிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மாணவனின் வீடியோ அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.