இஸ்லாமியர்களின் இறை தூதராக கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவை கைது செய்யவேண்டும் என்று கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மா தனது உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்கிறார். அவருக்கு அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஏற்கனவே நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இரண்டு பேர் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே தான் தெலங்கானாவிலும் பாஜக எம்.எல்.ஏ.ஒருவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஐதராபாத்தில் காமெடி ஷோ நடத்திய முனாவர் ஃபரூக்கிக்கு(Munawar Faruqui) எதிராக பாஜக எம்.எல்.ஏ.ராஜா சிங் காமெடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
முனாவர் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக ராஜா சிங் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதோடு காமெடியனுக்கு எதிராகவும், அவரின் தாயாருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருப்பதோடு, நபிகள் நாயகத்திற்கு எதிராகவும் அந்த வீடியோவில் ராஜா சிங் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானவுடன் இஸ்லாமியர்கள் நேற்று இரவு ஐதராபாத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ ராஜா சிங்கை கைது செய்யவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீஸார் இன்று பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கையும் கைது செய்தனர். ராஜா சிங் இதற்கு முன்பு காமெடியன் முனாவர் நிகழ்ச்சியை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை தீவைத்து எரிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.