ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் இன்று (23) நடைபெற்றது.
நிலையியற் கட்டளை இலக்கம் 121ற்கு அமைய அண்மையில் தெரிவுக் குழுவில் எடுக்கப்பட்ட ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதற்கமைய 2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் இக்குழுவில் ஆராயப்பட்டதுடன், இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைவிட சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன் இதற்கும் அனுமதி வழங்கியது.
அத்துடன், குழுவுக்கு முன்வைக்கப்பட்டிருந்த 2017ஆம் ஆண்டு 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி மற்றும் 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீடுச் சட்டத்தின் கீழான கட்டளை, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235வது அதிகாரம்) ஒழுங்குவிதி என்பவற்றுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.